தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை கோவை குறும்பாலை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்த நிலையில், தனியார் தொலைக் காட்சியான பாலிமருக்கு மட்டும் அனுமதி அளிக் கப்பட்டிருந்தது. பிரபல லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்துக்கொண்டார். பாலிமர் தனியார் தொலைக்காட்சிக்கு மட்டும் உள்ளே அனு மதி தரப்பட்டது இவர் ஏற்பாட்டில்தான் என்கிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய விஜய், கேரவன் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு செல்லும் வழியெல்லாம் தொண்டர்கள் பெருந்திரளாகக் குவிந்து வரவேற்றனர். சிறிதுநேரம் மட்டுமே கேரவனின் மேல்பகுதியில் நின்று தொண்டர்களுக்கு கையசைத்த விஜய் உள்ளே சென்ற நிலையில், தொண்டர்கள் ஆரவாரம் செய்து வேனைத் தட்டி வழிமறித்தனர். சில தொண்டர்கள் பௌன்சர்களையும் தாண்டி வேன் மீது ஏறி விஜய்க்கு சால்வை அணிவித்தனர்.
விழா மேடையில் பேசிய விஜய், “"தமிழக வெற்றிக்கழகம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கிய கட்சி அல்ல. மக்களுக்கு நல்லது கிடைக்குமென்றால் எந்த எல்லைக்கும் சென்று அதைச் செய்ய நாங்கள் தயங்கமாட்டோம். நமது ஆட்சி சுத்தமான அரசியலாக இருக்கும். ஊழல் வாதிகள் இருக்கமாட்டார்கள். எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தைரியமாக நமது பூத் ஏஜெண்டுகள் மக்களைச் சந்தியுங்கள். அறிஞர் அண்ணா சொன்னதை நான் உங்களிடம் சொல்ல ஆசைப் படுகிறேன். "மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களிடமிருந்து திட்டமிடு, மக்களை நேசி, மக்களுக்காக வேலை செய்!' இதைப் புரிந்து நீங்களும் செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீரைப்போல சுத்தமான ஆட்சி அமையும். நாம் வெற்றியடைவதற்கு நீங்கள்தான் முதுகெலும்பு. இதை மனதில் வைத்து செயல்படுங்கள். நல்லதே நடக்கும்''’என்று பேசினார்.
விஜய் விமானநிலையத்தில் இறங்கி நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிக்குச் செல்கையில் அவரது தொண்டர்களுக்காக ரோடு ஷா நடத்தினார். அதே தேதியில் கனிமொழி எம்.பி. மற்றும் துணை முதல்வர் உதயநிதி பங்குபெறும் சுப.வீரபாண்டி யனின் மாநாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வின் கொடிகளை விஜய் தொண்டர்கள் சேதப்படுத்தினர். 50 பேருக்கு மட்டுமே விமான நிலையத்தில் அனுமதியளிக்கப் பட்ட நிலையில் அளவுக்கு மீறி ஆட்களைக் குவித்து சேதப்படுத்தியதற்கு எதிராக, த.வெ.க.வினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.